தமிழ்நாடு சிறு தானிய திட்டத்தின் கீழ் சிறு தானியங்கள் பயிரிட தமிழக அரசு 50,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப்) நடத்திய ‘உணவு, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான வலிமைமிக்க சிறு தானியங்கள்’ என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழா இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது.

MSSRF தனது 34வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நோக்கில் இந்த சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறது. இந்த விழாவில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆண்டறிக்கையை வெளியிட்டார். அவர் மேலும் பல முன்னணி தினை உழவர் உற்பத்தி நிறுவனங்கள், சிறு தானியங்களை பதப்படுத்துதல் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நிறுவனங்கள், தேசிய சிறு தானியங ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் சிறு தானிய கண்காட்சியை தொடங்கி வைத்தார். பழங்குடியின விவசாயிகளுடனும் கலந்துரையாடினார். நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு சிறு தானிய திட்டத்தின் கீழ் சிறு தானியங்கள் பயிரிட தமிழக அரசு 50,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து அறிவிப்பையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஆர்.சக்கரபாணி , ஐந்தாண்டு சிறு தானிய திட்டத்தை தமிழக அரசு 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்தார். “தமிழக அரசு சார்பில் பொது விநியோக முறை (பி.டி.எஸ்) மூலம் மானிய விலையில் சிறு தானியங்கள் விநியோகிக்கப்படும். மேலும் தரிசு நிலத்தை சிறு தானிய சாகுபடியின் கீழ் கொண்டு வர ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த நடவடிக்கை “விவசாய நிலங்களில் பயிர் பன்முகத்தன்மையை” உறுதி செய்யும். தினசரி உணவில் அனைத்து வகையான சிறு தானியங்களை சேர்ப்பது மிகவும் முக்கியமாகும். சிறு தானியங்கள் நமக்கு நல்ல ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது, மேலும் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் புரதம் – இவை அனைத்தும் நம் ஆரோக்கியத்திற்கு அவசியம்.” என்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப் தலைவர் டாக்டர். சௌமியா சுவாமிநாதன் பேசியதாவது, “பத்தாண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், சிறு தானியங்கள் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம், உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளை நிறைவேற்றுவதில் அவர்களின் பங்கை வலியுறுத்துவதற்காக ‘நுட்ரி-தானியங்கள்’ என்ற வார்த்தையை உருவாக்கினார். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது இரண்டு அறிவுப் பணியாளர்கள் இருக்க வேண்டும் என்பது என் தந்தையின் கனவு, மேலும் MSSRF இல், அந்த பார்வைக்கு எங்களை மீண்டும் அர்ப்பணிக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என்று கூறினார்.